2 மதிப்பெண்கள் குறைந்ததால் தாய் கண்டிப்பு... பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
சென்னையில் அறிவியல் தேர்வில் 2 மதிப்பெண்கள் குறைந்ததால் தாய் கண்டித்ததோடு, தேர்வுத்தாளில் கையெழுத்திட மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 9 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் புகழினி (9), அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி புகழினி சமீபத்தில் நடந்த அறிவியல் தேர்வில் 15-க்கு 13 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

சிறுமி தேர்வுத்தாளில் தாயாரிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது, "2 மதிப்பெண்கள் ஏன் குறைந்தன?" எனக் கண்டித்த தாய், தேர்வுத்தாளில் கையெழுத்திட மறுத்துத் தந்தையிடம் வாங்குமாறு கூறியுள்ளார். தந்தையிடம் சென்றால் அவரும் திட்டுவாரோ என்ற பயத்திலும் தீவிர மன அழுத்தத்திலும் இருந்த சிறுமி, நேற்று இரவு தனது வீட்டின் அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது சிறுமி சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர், புகழினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளின் கல்வியை விட அவர்களின் மனநலனும் உயிருமே மிக முக்கியமானது. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் குழந்தைகளுக்குப் பெற்றோர் உரிய ஆதரவும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும்.
