கணவர் இறந்த துக்கம்.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை - ராணிப்பேட்டையில் துயரம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கணவர் இறந்த சோகம் தாங்காமல், இளம் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (23). இவரது கணவர் இறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், அவர் கடும் மனவேதனையிலும் தனிமையிலும் தவித்து வந்துள்ளார்.

கணவரின் இழப்பைத் தாங்க முடியாத வள்ளி, தனது 7 மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்குச் சென்று, அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் வள்ளியும் அவரது இரண்டு குழந்தைகளும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
