எம்.பி. மகன் கார் மோதி இளம்பெண் பலி... பெரும் பரபரப்பு!

 
mp

 

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மாதப்பூர் நகரில் உள்ள கோகினூர் வணிக வளாகம் அருகே நடந்த விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. லிங்கமனேனி ரமேஷின் மகன் லிங்கமனேனி சஞ்சுஸ், கடந்த 16-ந்தேதி மாலை தனது சொகுசு காரில் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள கடையில் வேலை செய்து வந்த பாரதி (வயது 26) என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது, எம்.பி.யின் மகன் ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய எம்.பி.யின் மகன் சஞ்சுஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.