முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒருவர் பலி.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

 
முக்கொம்பு

 

திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பார்த்தசாரதி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், ஹரி கோகுல் என்ற மற்றொரு இளைஞரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் விடுமுறை நாளையொட்டி முக்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு காவிரி ஆற்றில் சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது, பார்த்தசாரதி, ஹரி கோகுல் உள்ளிட்ட மூவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட அவர்களது நண்பர்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதில் யாமின் என்பவர் மீட்கப்பட்டார். ஆனால் பார்த்தசாரதி மற்றும் ஹரி கோகுலை உடனடியாக மீட்க முடியவில்லை.

தகவல் அறிந்ததும் வாத்தலை போலீசார் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் பார்த்தசாரதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கிடையே நீரில் மாயமான ஹரி கோகுலை மீட்புப் படையினர் விசைப்படகு மற்றும் நவீன உபகரணங்களின் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் முந்தைய நாள் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

விடுமுறை நாளில் நண்பர்களுடன் முக்கொம்பு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் ஆழமான பகுதிகளில் குளிப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பு எச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.