4 ஆண்டுகளாக ஃப்ரீசரில் தந்தையின் உடல்! மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

 
மாரடைப்பு

 

 

மும்பையில் 2022-ம் ஆண்டு உயிரிழந்த முதியவரின் உடல் சுமார் 4 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மலாட் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மையத்தின் ஃப்ரீசரில் முதியவரின் உடல் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த மையம் புதுப்பிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில், சொத்தை காலி செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடவடிக்கையின்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில், அந்த முதியவர் 2022-ம் ஆண்டு இயற்கையான முறையில் உயிரிழந்ததாகவும், அவருக்கு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.தந்தையின் மரணத்தால் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், உடலை நீண்ட காலம் பாதுகாக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அவரது மகள் தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடலை அமெரிக்காவில் உள்ள cryonics மையத்துக்கு கொண்டு சென்று நீண்ட காலம் பாதுகாக்க முடியுமா என்பது குறித்தும் குடும்பத்தினர் விசாரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சட்ட ஆலோசனையும் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடலை இவ்வளவு நீண்ட காலம் ஃப்ரீசரில் பாதுகாத்தது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், மையத்தின் நிர்வாகம் மற்றும் சொத்து உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் இதுவரை குற்றச்செயல் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். உடலை தொடர்ந்து எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சட்ட நடைமுறைகளின்படி முடிவு எடுக்கப்பட உள்ளது.