மைசூர் மசாலா தோசைக்குள் இறந்த எலி! சாப்பிட்ட வாடிக்கையாளர் உடல்நலம் பாதிப்பு.. ஓட்டல் உரிமம் ரத்து
மும்பை போரிவலி மேற்கு பகுதியில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட மைசூர் மசாலா தோசைக்குள் சிறிய இறந்த எலி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உணவு உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினர் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.போரிவலி மேற்கு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணா ஹோட்டலுக்கு அமித் திரிவேதி என்பவர் தனது சகோதரர்கள் மற்றும் மகனுடன் உணவு சாப்பிடச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் மைசூர் மசாலா தோசையை ஆர்டர் செய்துள்ளார்.
தோசையின் சில பகுதிகளை சாப்பிட்ட பின்னர், அதற்குள் சிறிய இறந்த எலி இருப்பதை பார்த்ததாக அமித் திரிவேதி புகார் தெரிவித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போரிவலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் இந்த புகாரை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது ஹோட்டலின் உணவு உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் தற்போது உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு உணவகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, தோசைக்குள் எலி இருந்ததாக கூறப்படும் புகார் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே சம்பவத்தின் முழு விவரமும் தெரியவரும்.
