விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனை தூக்கிச் சென்ற பெண்! சிசிடிவி மூலம் 40 மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

 
2

 

மும்பை மாங்கூர்டு பகுதியில் குடும்பத்தினருடன் இருந்த 2 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில், சுமார் 40 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த வழக்கில் பெண் ஒருவர் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாங்கூர்டு பகுதியில் உள்ள மார்க்கெட் சாலை அருகே கடந்த செப்டம்பர் 23-ம் தேதி மாலை குடும்பத்தினருடன் இருந்த 2 வயது சிறுவன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து மாங்கூர்டு போலீசார் குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக மாங்கூர்டு, தேய்னார், ஆர்சிஎப் மற்றும் டிராம்பே காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசாரை உள்ளடக்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

குழந்தை கடைசியாக காணப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்வது பதிவாகியிருந்தது. இதை முக்கிய தடயமாகக் கொண்டு போலீசார் அந்த பெண்ணின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.

சிசிடிவி காட்சிகளுடன் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் போலீஸ் உளவுத்தகவல்களையும் பயன்படுத்தி விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. குழந்தை மும்பையை விட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடுதல் நடத்தினர்.சுமார் 40 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் முடிவில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை கடத்தியதாக கூறப்படும் முஸ்கான் சாஹா மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் அவரது கணவர் போலாகுமார் சாஹா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். குழந்தை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.இந்த கடத்தலுக்கான காரணம் என்ன, குழந்தையை எங்கு அழைத்துச் சென்றனர், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.