மசாலா தோசைக்குள் செத்த எலி! வாடிக்கையாளர் அதிர்ச்சி... ஓட்டல் உரிமம் அதிரடியாக ரத்து!
மும்பை போரிவலி மேற்கு பகுதியில் உள்ள ஓட்டலில் வழங்கப்பட்ட மைசூர் மசாலா தோசைக்குள் இறந்த எலி இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த ஓட்டலின் உணவு உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இடைநீக்கம் செய்துள்ளது.
போரிவலி மேற்கு ரெயில் நிலையம் அருகே உள்ள ராதாகிருஷ்ணா ஓட்டலுக்கு அமித் திரிவேதி தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் மகனுடன் சென்றுள்ளார். அங்கு தென்னிந்திய உணவுகளை ஆர்டர் செய்த நிலையில், மைசூர் மசாலா தோசை ஒன்றும் வாங்கியுள்ளார்.
தோசையை சில வாய் சாப்பிட்ட பிறகு, அதற்குள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை அவர் கவனித்ததாக கூறப்படுகிறது. உணவைப் பார்த்தபோது சிறிய இறந்த எலி இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவர் போரிவலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த புகாரை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
புகாரைத் தொடர்ந்து FDA அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, ராதாகிருஷ்ணா ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உணவகங்களில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.எனினும், தோசைக்குள் எலி இருந்ததாக கூறப்படும் புகார் குறித்து அதிகாரிகளின் முழுமையான விசாரணை முடிவடைந்த பிறகே சம்பவத்தின் முழு உண்மை நிலவரம் தெரியவரும்.
