மும்பை பயங்கரவாத தாக்குதல்.. சதி திட்டத்தில் ஈடுபட்ட ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்!
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் தஹாவூர் உசேன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், நாரிமன் ஹவுஸ், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தன.

தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் பிடிபட்டான். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார். கடந்த 2009-ம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பாக கனேடிய குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான தஹாவூர் உசேன் ராணா (63) என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா கலிபோர்னியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்து அவரை நாடு கடத்தலில் இருந்து பாதுகாக்கிறது. குற்றம் சாட்டப்பட்டதற்கான ஆதாரங்களை நிரூபிக்க இந்தியா தவறிவிட்டதாக தஹாவூர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இந்திய-அமெரிக்க ஒப்பந்தப்படி தஹவுர் ரானாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
