காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா 4-வது இடம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்!

 
பிரதமர் மோடி பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அவர் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். புத்தரின் வாழ்க்கை போதனைகள் தற்கால உலகிற்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அமைதி என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து தொடங்குகிறது என்ற புத்தரின் வாசகத்தை நினைவுகூர்ந்த அவர், தன்னை வெல்வதே உலகிலேயே மிகப்பெரிய வெற்றி என்று நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்தியாவின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி குறித்து பிரதமர் பெருமிதத்துடன் பேசினார். குறிப்பாக காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா 56 கிகாவாட் என்ற மிகப்பெரிய இலக்கைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் உலக அளவில் காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இத்துறையில் சிறந்து விளங்குவதாகவும், தரிசு நிலங்களாக இருந்த பகுதிகள் இன்று எரிசக்தி மையங்களாக மாறி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

அறிவியல் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்துப் பேசிய பிரதமர், கல்பாக்கத்தில் உள்ள அணு உலை செயல்பாட்டு நிலையை எட்டியது ஒரு வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்டார். முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் இது உருவாக்கப்பட்டது இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்குச் சான்றாகும் என்று அவர் பாராட்டினார். மேலும் இந்திய தேசிய ஆவணக்காப்பகம் சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். நவீன தொழில்நுட்பத்தை வளர்ச்சியுடன் இணைப்பதன் மூலமே இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.