தீவிர புயலாக வலுப்பெற்று ரூட்டை மாற்றும் ‘முரசு’... சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

 
மழை கனமழை புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இன்று இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மழை விடுமுறை

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில்

மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படவும், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரநிலைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.