வெறும் ரூ24000 க்காக தம்பதி துடிக்கத் துடிக்கக் கத்தியால் குத்திக் கொலை... குழந்தைகள் கண் முன்னே பயங்கரம்!
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில், வீடு வாங்குவதில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாகத் தம்பதியினர் அவர்களது பச்சிளம் குழந்தைகளின் கண்முன்னேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முராதாபாத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது அண்டை வீட்டார் ஃபஹீமிடம் ஒரு வீட்டை விலை பேசி, அதில் பெரும் பகுதியை ஏற்கனவே கொடுத்துள்ளார். மீதமுள்ள ₹24,000 பணத்தைச் செலுத்தி வீட்டைப் பதிவு செய்யக் கோரியபோது, ஃபஹீம் கூடுதல் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக நிலவிய முன்விரோதம் தற்போது ரத்தக் களரியில் முடிந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், ஃபஹீமின் மகன் ஃபர்ஜந்த் மற்றும் அவரது நண்பர்கள் ராஜாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் ராஜாவையும், அவரது மனைவி ஃபராவையும் கண்மூடித்தனமாகச் சரமாரியாகக் குத்தினர். தலை முதல் வயிறு வரை பல இடங்களில் கத்திக் குத்து விழுந்ததில், தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்தபோது, ராஜாவின் 7 வயது மகள் மற்றும் 5 வயது மகன் ஆகியோர் தங்களது பெற்றோரைக் காப்பாற்ற முடியாமல் அலறித் துடித்தது காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.
உயிரிழந்த ஃபராவின் மடியில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, தாக்குதலின் போது கீழே விழுந்து காயமடைந்தான். குழந்தைகளின் கதறலைச் சற்றும் பொருட்படுத்தாமல், தம்பதியினரின் உயிர் பிரியும் வரை கொலையாளிகள் தங்களது வெறியாட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஐஜி முனிராஜ் மற்றும் எஸ்எஸ்பி சத்பால் அண்டில் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அற்பப் பணத்திற்காக ஒரு குடும்பத்தையே சிதைத்த இந்தச் சம்பவம் முராதாபாத் பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
