பயங்கரம்: காதல் ஜோடிகளுக்குப் பஞ்சாயத்து செய்த கொள்ளையன் கொலை!

 
dharmapuri dharmapuri

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் சத்தியமூர்த்தி (27), அவரது நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் மாயமான சத்தியமூர்த்தியைத் தேடி வந்த போலீசார், அவரது நண்பர் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது, மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சத்தியமூர்த்தி அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வனப்பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்

கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி மீது டூவீலர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் காதலிக்கும் ஜோடிகளுக்குப் பிரச்சனை ஏற்பட்டால் பஞ்சாயத்து செய்து பணம் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கொள்ளையடித்த பணத்தைப் பிரிப்பதில் நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட ஆத்திரத்தில் 5 நண்பர்கள் சேர்ந்து அவரைப் பாறையில் முட்டி கொலை செய்துள்ளனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்றவர்கள் சிக்கினால் மட்டுமே கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காதல் பஞ்சாயத்து மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டிருப்பது அந்த வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.