அதிமுகவிலிருந்து விலகிய முருகுமாறன் - எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம்!

 
முருகுமாறன்

அதிமுக அமைப்புச் செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன், கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்டிக் காத்த இயக்கம் இன்று தடம் மாறிவிட்டதாகவும், உண்மையாக உழைத்தவர்கள் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, கோடிகள் உள்ளவர்களுக்கே வேட்பாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "இன்றைய தலைமையை நம்பிக் கெட்டவர்களில் நானும் ஒருவன்" என்று அவர் கடிதத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன்

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான காட்டுமன்னார்கோவில் ஒதுக்கப்படாமல், திட்டக்குடி தொகுதி வழங்கப்பட்டதையும், தலைமை தனது உழைப்பை உதாசினப்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற அடிப்படையில் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும், மாற்றான் தாய் மனப்பான்மையோடு தலைமை நடந்துகொண்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கழகத்தின் கொள்கைகள் கைவிடப்பட்டுவிட்டதாகவும், "மதியாதார் வாசல் மிதியாதே" என்ற முதுமொழியின்படி, மாணவப் பருவம் முதல் நகமும் சதையுமாகத் தான் பயணித்த இப்பேரியக்கத்திலிருந்து மிகுந்த மனவலியோடு தன்னை விடுவித்துக் கொள்வதாகவும் முருகுமாறன் தனது கடிதத்தில் முடிவு அறிவித்துள்ளார்.