சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் முஷ்ஃபிகுர் ரஹீம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான முஷ்ஃபிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2027 பிப்ரவரியில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமீம் இக்பால் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட 39 வயதான முஷ்ஃபிகுர் ரஹீம், மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் தனது சுமார் இரண்டு தசாப்த கால சர்வதேசப் பயணத்தை நிறைவு செய்கிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவே அவர் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு முஷ்ஃபிகுர் ரஹீம் தன்னிடம் ஓய்வு முடிவைத் தெரிவித்ததாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கத் தாம் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார். மேலும், அவரது சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்த டெஸ்ட் போட்டியைச் சிறப்பான நிகழ்வாக நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரிய முஷ்ஃபிகுர், இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,062 ரன்கள் குவித்துள்ளார் (14 சதங்கள், 30 அரை சதங்கள்). டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்தின் அதிகபட்ச ரன் குவிப்பாளராகவும் அவர் திகழ்கிறார்.
வங்கதேசம் சார்பில் டெஸ்டில் மூன்று இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரரான இவர், கேப்டனாக இருந்த காலத்தில் 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராகவும், 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வங்கதேச அணி வரலாற்று டெஸ்ட் வெற்றிகளைப் பெற முக்கியப் பங்காற்றினார்.
