பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு!
பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சென்றுள்ளார். அவர் உணவகத்திற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதில் காரின் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
தனது காருக்கு நேர்ந்த கதியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "இது தருதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை" எனக் கடுமையாகச் சாடியுள்ளார். பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு இத்தகைய சேதத்தை ஏற்படுத்தியவர்களின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பொதுக் கலைஞருக்குச் சென்னை போன்ற மாநகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
