டெல்லியில் பிரபல இசைக்கலைஞர் நடுரோட்டில் அடித்துக் கொலை - 8 பேர் கைது!
தெற்கு டெல்லி ஆசிராம் பகுதியில், நள்ளிரவு உணவக ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறில் மணிப்பூரியைச் சேர்ந்த பிரபல ராக் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் பிரபல ராக் இசைக்கலைஞரும், 1980-களின் தொடக்கத்தில் ஃபீனிக்ஸ் இசைக்குழுவின் முன்னணி கிதார் கலைஞருமான சோங்தம் விக்ரம் சிங் (55), தனது மனைவி மற்றும் மகனுடன் புது டெல்லி சன்லைட் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவர் டெல்லிக்குக் குடிபெயர்ந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வந்தார். இவரது தாயார் சோங்தம் கமலா புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணியளவில் சிங் குப்பைகளை வீசுவதற்காகக் கீழே சென்றபோது, அங்குள்ள கட்டிடத்தின் படிக்கட்டு லாபியில் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த உணவு விநியோக ஊழியர்களிடம் அதைக் கண்டித்துள்ளார். இது வன்முறை மோதலாக மாறியுள்ளது. அருகில் உள்ள பல்வேறு தாபாக்கள் மற்றும் உணவகங்களைச் சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் உடனடியாக சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இவர்கள் விக்ரம் சிங்கைப் படிக்கட்டுகளில் வைத்துத் தாக்கியுள்ளனர்.
விக்ரம் சிங்கின் சப்தம் கேட்டு, குடும்பத்தினர் வந்த நிலையில், அவர்கள் விக்ரம் சிங்கை மீட்டு ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சைனி தாபா, நியூ சௌத்ரி தாபா, அன்னபூர்ணா தாபா மற்றும் டைமண்ட் பிஸ்ஸா ஆகியவற்றைச் சேர்ந்த பரத் குமார், பிரமோத், தீபான்ஷு, மோகன் விஸ்வகர்மா, ரம்ஜான் கான், விஜய், மன்னு உட்பட 7 பேருடன் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனையும் சேர்த்து மொத்தம் 8 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
