களைக்கட்டும் முத்தாரம்மன் தசரா திருவிழா.. சுவாமி வேடமணிந்து வசூல் செய்யும் பக்தர்கள்..!

 
முத்தாரம்மன் தசரா திருவிழா
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தென் தமிழகத்தில் கலை கட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து அங்கேயே தங்கியிருந்து ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு உண்டு அம்மனை வழிபடுகின்றனர்.

Kulasai Mutharaman: மஹிசாசுரமர்த்தினி கோலத்தில் வீதி உலா! - Gem Television

விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் தசரா பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

அப்போது கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

குலசை தசரா திருவிழாவில் 2 வயது குழந்தை கடத்தல் : அதிகரிக்கும் சம்பவங்கள்..  போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்!! - Update News 360

10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web