கார் தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை உட்பட 6 பேர் பலி!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், பானிபட்-கதிமா தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
திங்கள்கிழமை (நவம்பர் 9) காலை ஜகஹேரி அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்விளக்குக் கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ மளமளவெனப் பரவியதால் காருக்குள் இருந்தவர்களால் வெளியேற முடியவில்லை. இதனால் காரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தையும் ஒருவர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காருக்குள் இருந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
உயிரிழந்தவர்கள் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
