"எங்கம்மா போனே..." தீபாவளிக்காக புதுத்துணி வாங்கி வைத்து மகளுக்காகக் காத்திருக்கும் தாய் - செஞ்சி சிறுமி வழக்கில் தொடரும் துயரம்!

 
செஞ்சி சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 22 நாட்கள் கடந்துள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மகளுக்குப் புத்தாடை வாங்கி வைத்துவிட்டு தாய் கண்ணீருடன் காத்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவானி. இவரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.

உள்ளூர் காவல்துறை நடத்திய 10 நாள் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுத் தற்போது 12 நாட்களாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமி

சம்பவம் நடந்த அக்டோபர் 11 நள்ளிரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆலம்பூண்டியில் உள்ள 3 செல்போன் டவர்களின்கீழ் பதிவான சுமார் 600 பேரின் செல்போன் அழைப்புகளைச் சேகரித்து, சிபிசிஐடி போலீசார் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலம்பூண்டி கிராமத்தில் தற்காலிக முகாம் அமைத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் உட்படச் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் அனைவரும் புத்தாடைகளுடன் பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகும் சூழலில், "என் பிள்ளை நிச்சயம் உயிருடன் திரும்பி வருவாள்" என்ற நம்பிக்கையுடன் தாய் பவானி தனது மகளுக்காகப் புத்தாடை வாங்கி வைத்துள்ளார்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

படுக்கையறையில் மகளின் புகைப்படத்தைப் பார்த்தபடி "எங்கம்மா போனே..." என்று அந்தத் தாய் வடிக்கும் கண்ணீர் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, சிறுமி ஹேமலதாவைக் பத்திரமாக மீட்டுத் தாயின் மடியில் சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.