"கோனியம்மனுக்கும், மருதமலை முருகனுக்கும் என்னுடைய பிரார்த்தனைகள்..” கோவையில் பிரதமர் மோடி உருக்கம்!

 
மோடி மோடி

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தனது உரையைத் தொடங்கும் முன், "கோனியம்மன் மற்றும் மருதமலை முருகனுக்கு எனது பிரார்த்தனைகளை காணிக்கையாக்குகிறேன்" என பக்திப் பெருக்குடன் பேசினார். கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு முதல், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"தமிழக மக்கள் மிகத் தெளிவான செய்தியைச் சொல்லிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து வெளியேறப்போகிறது; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரப்போகிறது" என்று பிரதமர் மோடி ஆவேசமாக முழங்கினார். கொங்கு மண்டல மக்கள் எப்போதும் வளர்ச்சி அரசியலுக்கும், தேஜ கூட்டணிக்கும் உற்ற தோழனாக இருந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இங்கு வரும்போதெல்லாம் உங்களில் ஒருவனாகவே என்னை உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மோடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரதமர், "சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் அதிக அளவில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் வர வேண்டும் என்பதே எனது தீராத ஆசை. இதற்காக அனைத்துக் கட்சிகளிடமும் நான் தனிப்பட்ட முறையில் ஆதரவு கோரினேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய புகழை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள், எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை என்றும் கூறினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தங்களின் கீழ்த்தரமான அரசியலால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவைத் தோற்கடித்துவிட்டன" என்று சாடினார்.

மோடி

இந்த மசோதா நிறைவேறியிருந்தால், இன்று எளிய குடும்பப் பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக உயர்ந்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பாஜகவிற்கும் திமுகவிற்கும் இடையே உள்ள இந்த அடிப்படை வித்தியாசத்தை மக்கள் உணர்ந்து, வரும் தேர்தலில் வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.