மகனுக்குப் புற்றுநோய்.. நிதி திரட்டிய தாய்க்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை!
ஆஸ்திரேலியாவில் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி வசூலித்த கல்நெஞ்சக்காரத் தாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுத் தனது மகனையே பகடைக்காயாகப் பயன்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாகத் தனது மகனின் பரிதாப நிலையைச் சித்தரித்து, உலகம் முழுவதிலும் உள்ள கருணை உள்ளம் கொண்ட மக்களிடம் இருந்து பெருமளவு பணத்தைச் சுருட்டியுள்ளார். அந்தப் பணத்தை மகனின் மருத்துவத்திற்குப் பயன்படுத்தாமல், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் உல்லாசப் பயணங்களுக்குச் செலவிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மக்களை நம்ப வைப்பதற்காக அந்தத் தாய் செய்த காரியங்கள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சிறுவனுக்குப் புற்றுநோய் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, அவனது தலைமுடி மற்றும் புருவங்களை வலுக்கட்டாயமாகச் சிரைத்து மொட்டை அடித்துள்ளார். மேலும், அந்தச் சிறுவனின் உடலில் ஆங்காங்கே போலியாகக் கட்டுகளைப் போட்டு, நடக்கத் தெரிந்த குழந்தையை எப்போதும் சக்கர நாற்காலியிலேயே அமர வைத்து நாடகமாடியுள்ளார்.
இந்தத் தாயின் விசித்திரமான நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிறுவனை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அந்தச் சிறுவனுக்கு எவ்வித நோயும் இல்லை என்பதும், அவன் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பணத்திற்காகத் பெற்ற பிள்ளையையே சித்திரவதை செய்த அந்தப் பெண்ணின் செயல் மனிதாபிமானமற்றது எனக் கடும் கண்டனம் தெரிவித்தார். குழந்தையைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் மக்களை ஏமாற்றியது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
ஒரு தாயே தனது பிள்ளைக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி வசூலில் ஈடுபட்டது ஆஸ்திரேலியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் இத்தகைய மோசடிகளால், உண்மையான ஏழைகளுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
