தேரோட்டம் மற்றும் அறுபத்து மூவர் திருவிழா... மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 
மயிலாப்பூர் மயிலாப்பூர்

உலகப்பிரசித்தி  பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் 29ம் தேதி அதிகாலை 6 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 30 ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு  அறுபத்து மூவர் உற்சவமும் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு  ஏப்ரல் 1ம்  தேதி வரை மயிலாப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களைச் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அறுபத்து மூவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

குறிப்பாக, கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள் மற்றும் அதனை இணைக்கும் முக்கியச் சாலைகளில் ஒவ்வொரு உற்சவமும் தொடங்கும் நேரம் முதல் அவை நிறைவடையும் வரை போக்குவரத்து முற்றிலும் மாற்றியமைக்கப்படும். அந்தப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அவசர கால ஊர்திகள் தடையின்றிச் செல்லவும் ஏதுவாக இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோவில்

திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் கோயில் அருகே வாகனங்களை நிறுத்துவதற்குப் பிரத்யேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆன்மீக மணம் கமழும் மயிலை மாநகரம் இப்போது விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த போக்குவரத்து மாற்றங்கள் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது.