மியான்மரில் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அதிபர் வின் மைண்ட் உட்பட 4,335 கைதிகள் விடுதலை!

 
மியான்மர் மியான்மர்


மியான்மர் புத்தாண்டை முன்னிட்டு, சிறையில் இருந்த 4,335 கைதிகளைப் பொது மன்னிப்பின் கீழ் அந்நாட்டு அரசு இன்று அதிரடியாக விடுதலை செய்துள்ளது.

சமீபத்தில் மியான்மரின் அதிபராகப் பொறுப்பேற்ற மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு அது 40 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் எஞ்சியிருந்த பழைய சிறைத் தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலையில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது முன்னாள் அதிபர் வின் மைண்ட் அவர்களின் விடுதலைதான்.

2021-ஆம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு ராணுவத்தால் காவலில் வைக்கப்பட்டிருந்த வின் மைண்ட் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் மன்னிக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் 179 வெளிநாட்டினரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் உடனடியாகத் தத்தமது நாடுகளுக்கு நாடுகடத்தப்பட உள்ளனர்.

மியான்மரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் சுதந்திர தினம் மற்றும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும் 'திங்யான்' புத்தாண்டு ஆகிய தினங்களில் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். இருப்பினும், தற்போதைய ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நீடித்து வரும் சூழலில், இந்த மிகப்பெரிய அளவிலான விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.