மியான்மர் ராணுவம் முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியது... 24 கிளர்ச்சியாளர்கள் பலி!
மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு அரங்கேறிய ராணுவ ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, அங்குள்ள பழங்குடியின ஆயுதக் குழுக்கள் மற்றும் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தொடர் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மிக முக்கிய வர்த்தக நகரமான 'மவ்டாங்' (Mawtaung) பகுதியை மியான்மர் ராணுவம் தற்பொழுது மீண்டும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்ற இந்த முக்கிய எல்லையோர நகரத்தை மீட்க, ராணுவத்தினர் கடந்த இரண்டு வாரங்களாகப் பயங்கரமான எதிர் தாக்குதல் வேட்டையை நடத்தி வந்தனர். இந்த அதிரடி வேட்டையின் போது இரு தரப்பிற்கும் இடையே 200-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆயுத மோதல்கள் வெடித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கொடூரமான மோதல்களில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் குறைந்தது 24 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் சிலரும் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த நகரத்தைக் கைப்பற்றியதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை வர்த்தகப் போக்குவரத்துப் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
