கடப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 7 அடி மர்மப் பொருள்: ராக்கெட் லாஞ்சரா? மீனவர்கள் அதிர்ச்சி!
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரகுப்பம் கடற்கரையில் ராக்கெட் லாஞ்சர் போன்ற உருளை வடிவ மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடற்கரை மணலில் சுமார் 7 அடி நீளமுள்ள மர்மப் பொருள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கரை ஒதுங்கிய அந்தப் பொருளின் ஒரு முனையில் சிவப்பு நிறமும், நடுப்பகுதியில் கருப்பு நிறமும் பூசப்பட்டு மீன்பிடி வலை சிக்கியிருந்தது. இது கடலில் பாதுகாப்புப் படையினர் ஒத்திகையின் போது ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சரின் உதிரிபாகமாகவோ அல்லது சரக்குக் கப்பல்களில் இருந்து விழுந்த பாகமாகவோ இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த சூனாம்பேடு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் அருகில் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து அந்தப் பொருளைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர். இது வெடிபொருளா அல்லது ராக்கெட்டின் உதிரிபாகமா என்பதைக் கண்டறிய நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
