மயானத்தில் மர்ம மரணம்... இளைஞர் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு... சென்னையில் பரபரப்பு!
சென்னை வானகரம் பகுதியில் உள்ள மேட்டுக்குப்பம் சாலை சுடுகாட்டில், வாலிபர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாகத் திருவேற்காடு போலீசாருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த இளைஞரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரின் முகம் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களில் பலத்த காயங்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயது வீரா என்பது தெரியவந்துள்ளது. கூலித் தொழிலாளியான இவர், எப்படிச் சுடுகாட்டிற்கு வந்தார் என்பது குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீரா குடிபோதையில் சுடுகாட்டுப் பக்கம் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தாரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அவரை அடித்துக் கொலை செய்து வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், வீராவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுடுகாட்டில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
