லிவ்-இன் வாழ்ந்து வந்த இளம்ஜோடி மர்ம மரணம்.. கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ஒரே வீட்டில் வசித்து வந்த இளம் ஜோடி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தோரியா மாவட்டத்தைச் சேர்ந்த குட்டு பாஸ்வான் (27) மற்றும் ஜோதி (24) ஆகிய இருவரும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள துஹல்பூர் கிராமத்தில் ஒரு வாடகை அறையில் கடந்த சில மாதங்களாக 'லிவ்-இன்' உறவில் வசித்து வந்தனர். ஜோதி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் (ஏப். 22) இரவு, இவர்களது அறை நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாலெட்ஜ் பார்க் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது அதிர்ச்சிகரமான காட்சிகள் தென்பட்டன.
குட்டு பாஸ்வான் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஜோதி தரையில் சடலமாகக் கிடந்துள்ளார். உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், இவர்கள் உயிரிழந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், குட்டு பாஸ்வான் முதலில் ஜோதியைக் கொலை செய்துவிட்டு, அதன் பிறகு தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். எனினும், உயிரிழப்பிற்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதி செய்யப்படும்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தற்கொலை கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
