மைசூரு தசரா விழா: 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் 54 வயது பிரசாந்தா யானை!
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலத்தில், 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானையாக 54 வயதான பிரசாந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.
மைசூரு தசரா விழாவில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்க அம்பாரியைச் சுமந்து வந்த அபிமன்யு யானைக்கு 60 வயது நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு தங்க அம்பாரியைச் சுமக்கப்போகும் யானை எது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக பிரசாந்தா, மகேந்திரா, தனஞ்செயா, சுக்ரீவா, ஏகலவ்யா ஆகிய 5 யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தையும் இரைச்சலையும் சமாளிக்கும் பிரசாந்தா
அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை சுமார் 5 கி.மீ. தூரம் மணல் மூட்டைகள் மற்றும் மர அம்பாரியைச் சுமந்து செல்லும் பயிற்சி யானைகளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியின்போது மகேந்திரா யானை சிறிது தூரம் சென்றதும் நின்றுவிட்டதால், போட்டியிலிருந்து விலக்கப்பட்டது. சுக்ரீவா, ஏகலவ்யா ஆகிய யானைகளும் முழுமையான தகுதியை எட்டாத நிலையில், தனஞ்செயா யானை ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழாவுக்கு அனுப்பப்பட்டது.
இறுதியாக, பொதுமக்களின் கூட்ட நெரிசல் மற்றும் அதிக சத்தத்துக்கு அஞ்சாமல் அமைதியாகவும் கம்பீரமாகவும் நடந்து செல்லும் பிரசாந்தா யானை தங்க அம்பாரியைச் சுமக்கத் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட பொறுப்பு மந்திரி யதீந்திரா சித்தராமையா இதனை அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்தா யானை தங்க அம்பாரியைச் சுமந்து செல்லும் ஜம்பு சவாரி ஊர்வலத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
