நாகாலாந்து துணை முதல்வர் மகன் திடீர் மரணம்! பிரதமர் மோடி இரங்கல்
நாகாலாந்து மாநில துணை முதல்வர் டி.ஆர். ஜெலியாங்கின் மகன் குச்சி ரங்க்காவ் ஜெலியாங் (Kuchi Rangkau Zeliang) காலமானார். அவரது மறைவு நாகாலாந்து அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குச்சி ரங்க்காவ் ஜெலியாங், திமாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், குச்சி ரங்க்காவ் ஜெலியாங்கின் அகால மரணம் மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் டி.ஆர். ஜெலியாங் குடும்பத்தினருடனும் அவர்களது நண்பர்களுடனும் தனது எண்ணங்கள் இருப்பதாகவும், மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் குச்சி ரங்க்காவ் ஜெலியாங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
