கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! நாகாலாந்தில் அதிர்ச்சி.. தீவிர விசாரணை
நாகாலாந்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படும் சம்பவங்களில் கடந்த 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகாலாந்தின் துவன்சங் மற்றும் மொகோக்சுங் மாவட்டங்களில் சந்தேகத்திற்குரிய மதுபானத்தை அருந்தியதாக கூறப்படும் பலர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் துவன்சங் மாவட்டத்தில் 11 பேரும், மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கான காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சந்தேகிக்கப்படும் மதுபானத்தின் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோத மதுபானத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சந்தேகத்திற்குரிய மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகாலாந்தில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகத்திற்குரிய மதுபானத்தை அருந்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி, மதுபானத்தின் மூலாதாரம் மற்றும் உயிரிழப்புகளுக்கான சரியான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
