ரூ.4.88 லட்சத்தை சாப்பிட்ட கரையான்கள்... பணத்தை வீட்டில் வைத்திருந்த எலக்ட்ரீசியனுக்கு அதிர்ச்சி!
நாகையில் வீட்டில் மர அலமாரியில் சேமித்து வைத்திருந்த ரூ.4 லட்சத்து 88 ஆயிரம் பணத்தை கரையான்கள் அரித்து நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை நீலா மேலவீதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (30). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவர், ஒப்பந்த அடிப்படையில் வெளியூர்களுக்கும் சென்று பணியாற்றி வருகிறார். இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தார்.

வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அலமாரியைத் திறந்து பணத்தை எடுக்க முயன்றார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகள் கரையான்களால் அரிக்கப்பட்டு கிழிந்து சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மொத்தம் ரூ.4.88 லட்சம் பணம் சேதமடைந்திருந்தது.

இதையடுத்து, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாகையில் உள்ள வங்கிகளை அணுகியுள்ளார். அங்கிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு சீரியல் எண்கள் இல்லாத நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், முழுத் தொகையும் கிடைக்கும் என உறுதியளிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக செல்வமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.வீட்டில் பணத்தைச் சேமித்து வைத்ததால் ஏற்பட்ட இந்த இழப்பு நாகையில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
