மருத்துவமனையில் இருந்து தப்பிய போக்சோ கைதி! கழிவறைக்கு சென்றபோது போலீசாருக்கு அதிர்ச்சி

 
கன்னியாகுமரி

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்சோ வழக்கு கைதி போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (36), தற்போது குமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் ராஜ், வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடுதல் நடத்தினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாகர்கோவில் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஸ்டீபன் ராஜை பிடிக்க தனிப்படையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே, மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.