118 பவுன் நகை கொள்ளை... “ரீல்ஸ் பார்த்துதான் திட்டம்!” கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!

 
மதுமிதா

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அந்த பெண் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து கொள்ளைக்கு திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.நாகர்கோவில் அருகே அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மதுமிதா. பிரபல யூடியூபரான இவர், தனது சமூக வலைதளப் பக்கங்களில் நகைகள், பணம் உள்ளிட்டவற்றை காட்டி ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி மதுமிதா கணவருடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 118 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரையின் மகன் இசக்கி பாண்டி (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீஸ் விசாரணையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பார்த்ததாகவும், அதில் அவர் நகைகள் மற்றும் பணத்தை வெளிப்படையாக காட்டியிருந்ததை கவனித்ததாகவும் இசக்கி பாண்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே கொள்ளைக்கு திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை நடந்தபோது மர்ம நபர்கள் ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்து, டெலிவரி ஊழியர்கள் போன்று மோட்டார் சைக்கிளில் சென்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளையில் இசக்கி பாண்டிக்கு வேறு யாரேனும் உதவினார்களா? அவருடன் வந்த மற்றொரு நபர் யார்? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் எங்கே உள்ளன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட செல்வம், வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் குடும்பத்தினர் எப்போது வீட்டில் இருப்பதில்லை போன்ற தகவல்களை வெளிப்படையாக பகிர்வது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் மீண்டும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.