முதல்வர் விஜய் மதுரை வருகை: நாளை ட்ரோன்கள் பறக்கத் தடை!
முதல்வர் விஜய் நாளை மதுரை வருவதையொட்டி, மதுரை மாவட்டத்தில் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் விஜய் செப்டம்பர் 28-ம் தேதி விமானம் மூலம் மதுரை வந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் பயணிக்கும் வழித்தடங்கள், அவர் தங்கும் இடம், செல்லும் இடங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை நாளை முழுவதும் அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடையை மீறி ட்ரோன் அல்லது பிற ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் நாளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக மதுரை வரும் அவர், நிகழ்ச்சிக்கு முன்பாக சமீபத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னர் மதுரையில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வகையில் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வரின் மதுரை பயணத்தை முன்னிட்டு விமான நிலையம், கோயில், அரசு மருத்துவமனை மற்றும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.ட்ரோன் தடை உத்தரவு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் ட்ரோன் இயக்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
