பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து ஏ.என்.எஸ்.பிரசாத், நிஷா ராஜா நீக்கம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

 
ஏ.என்.எஸ்.பிரசாத் ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக அரசியல் களம் ஆட்சி அமைப்பதற்கான பரபரப்பில் இருக்கும் நிலையில், பாஜக தனது மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் முக்கிய நிர்வாகி நிஷா ராஜா ஆகியோரைத் தற்காலிகமாகப் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அதிமுக தலைமையிலான கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நயினார் நாகேந்திரன்

தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்காத நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல், மாநிலச் செயற்குழு உறுப்பினரான நிஷா ராஜாவும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பாஜக ஏற்கனவே "யாருக்கும் ஆதரவு இல்லை" என அறிவித்துள்ள நிலையில், அதற்கு முரணாகக் கருத்துத் தெரிவித்த நிர்வாகிகளைத் தூக்கியடித்திருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயினார் நாகேந்திரன்

ஆட்சி அமைப்பதில் தவெக-விற்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்து வரும் சூழலில், பாஜக-விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நீக்க நடவடிக்கைகள் மற்ற கட்சிகளிடையே உற்று நோக்கப்படுகின்றன. ஏற்கனவே பாஜக-வின் ஒரே எம்.எல்.ஏ போஜராஜன் யாருக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.