தென்காசி அத்திரிமலையில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்!
தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள புகழ்பெற்ற அத்திரிமலைக்கு சென்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது மனைவியுடன் சேர்ந்து வழிபாடு நடத்தினார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைத்தலத்தில், அருள்மிகு அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் திருக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டார். அத்ரி மகரிஷி மற்றும் அனுசுயாதேவி தவமிருந்த இடமாகக் கருதப்படும் இக்கோயிலில் மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு கோரக்கர் சித்தரின் சன்னதியிலும் அவர் தரிசனம் மேற்கொண்டார். சித்தர்களின் பூமியாகக் கருதப்படும் இப்பகுதியில் தரிசனம் செய்தது தமக்கு மிகுந்த மனத்தெளிவையும், ஆத்ம திருப்தியையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "அத்திரிமலை என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது இயற்கையும் ஆன்மீகமும் ஒன்றிணைந்த ஒரு புண்ணிய பூமி. இங்கே நிலவும் அமைதி எத்தகைய மன அழுத்தத்தையும் போக்கவல்லது. இறைவனின் அருளும், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும் நிறைந்த இந்தத் தலத்திற்கு அனைவரும் ஒருமுறையாவது நேரில் வந்து, அந்த அனுபவத்தை உணர வேண்டும்," என்று விருப்பம் தெரிவித்தார்.

அத்திரிமலைக்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனை, அப்பகுதி பாஜக நிர்வாகிகளும் ஆன்மிக அன்பர்களும் உற்சாகமாக வரவேற்றனர். தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கும் வேளையில், அவரது இந்த மலைப்பயணம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
