"நீட் குறித்த பிரதமரின் வாக்குறுதிகளை வரவேற்கிறேன்" - நயினார் நாகேந்திரன்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள வாக்குறுதிகளையும், மத்திய அரசின் உடனடி நடவடிக்கைகளையும் வரவேற்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், நீட் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கருத்துகளை வரவேற்பதாக கூறினார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ததுடன், மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாத வகையில் மிக விரைவாக மறுதேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசின் துரிதச் செயல்பாட்டைக் காட்டுகிறது.
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள வாக்குறுதிகள் மற்றும் நல்வழிமுறைகள் மிகுந்த வரவேற்புக்குரியவை. எதிர்காலத்தில் இதுபோன்ற தேர்வு முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் பற்றி அவர் குறிப்பிட்டது, தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தண்டனை வழங்கச் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதையும், புதிய கடுமையான சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மத்திய அரசு மாணவர்களின் பக்கமே நிற்கிறது என்பதையும், நேர்மையான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதிசெய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையும் இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
