நயினார் நாகேந்திரன் மகன் மீது ரூ.100 கோடி நில மோசடி புகார்... தவெக ஆட்சியில் நடவடிக்கை பாயுமா? அறப்போர் இயக்கம் கேள்வி!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த விவகாரத்தில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மற்றும் இடைத்தரகர் இளையராஜா ஆகியோர் மீது புதிய தவெக அரசு உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் புகாரை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஏற்கனவே மோசடியாக ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் இளையராஜா என்ற நபரின் உதவியோடு இந்த நில அபகரிப்பு அரங்கேறியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த நிலத்தை, அப்போதைய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, போலி ஆவணங்களை தயாரித்து நெல்லையிலேயே சட்டவிரோதமாக ஒப்பந்தப் பத்திரப்பதிவுசெய்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக ஆட்டையை போட்ட இளையராஜா என்ற மோசடி பேர்வழி உதவியோடு, திமுக ஆட்சியில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி மதிப்பிலான நிலத்தை அன்றைய நெல்லை MLA நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி நெல்லையில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து… pic.twitter.com/xLw3aP6gFN
— Arappor Iyakkam (@Arappor) July 11, 2026
இந்தநில மோசடி குறித்து அறப்போர் இயக்கம் ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்தப் போலி ஒப்பந்தப் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மோசடியின் பின்னணியில் இருந்த முக்கியக் குற்றவாளிகளான இடைத்தரகர் இளையராஜா மற்றும் நயினார் பாலாஜி ஆகியோர் மீது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையோ அல்லது காவல் துறையோ இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்த விவகாரத்தை அறப்போர் இயக்கம் மீண்டும் கையில் எடுத்துள்ளது. "கடந்த திமுக ஆட்சியில் செல்வாக்கு மிக்க நபர்கள் என்பதால் இந்த மோசடிப் பேர்வழிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் தப்பிக்க விடப்பட்டனர். தற்போதைய தவெக அரசாவது இந்த நில மோசடி கும்பல் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுக்குமா?" என அறப்போர் இயக்கம் தங்களது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
