தலைவர் நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைப்பு!

 
நல்லகண்ணு

இந்திய அரசியல் களத்தின் எளிமைக்கும், தூய்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடல், அவரது விருப்பப்படியே மருத்துவ ஆய்வுக்காகத் தானமாக வழங்கப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரரும், வாழ்நாள் முழுவதும் விளிம்புநிலை மக்களுக்காகப் போராடியவருமான ஐயா நல்லகண்ணு அவர்கள், தனது 101-வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவு தமிழக அரசியலில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

சென்னை பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நல்லகண்ணு

புகழுக்கோ, ஆடம்பரத்திற்கோ ஆசைப்படாத அவர், தனது மறைவிற்குப் பிறகு தனது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்று ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது உடல் நேற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

நல்லகண்ணு அவர்களின் உடல் அடுத்த 6 மாதங்களுக்குச் சிறப்பு வேதிப்பொருள் திரவத்தில் (Embalming) வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் என்றும், அதன் பிறகு மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் கல்லூரி முதல்வர் சாந்தாராம் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு

நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து, இளமையிலேயே பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து, சாதி ஒழிப்பு, நிலமற்ற விவசாயிகளின் உரிமை எனத் தனது 80 ஆண்டுகால பொதுவாழ்வை மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். தமிழக அரசு இவருக்கு முதல் 'தகைசால் தமிழர்' விருதினை வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இறந்த பின்பும் சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த சிந்தனை, உடல் தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.