காதலை ஏற்க மறுத்த மாணவி வீடு முன்பு செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!
ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர், ஒருதலையாகக் காதலித்த மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால், அவரது வீட்டின் அருகே உள்ள 80 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த சக மாணவி ஒருவரை, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் சூர்யமூர்த்தி (21) ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததால் மனமுடைந்த சூர்யமூர்த்தி, நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் அருகே இருந்த 80 அடி உயர செல்போன் டவரில் ஏறிய அவர், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும், மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
