தவறான சிகிச்சையால் 8 வயது சிறுமி பலி... உறவினர்கள் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொய்யேரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி காவியா தம்பதியினருக்கு கவிக்ஷா மற்றும் நிதிக்ஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகளான ஏழு வயது கவிக்ஷா குப்பிச்சிபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24 ஆம் தேதி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமிக்குக் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு மருத்துவர் இறுக்கமாக மாவுக் கட்டு போட்டதால் காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் வலி குறையாததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு வலது கால் முழங்காலுடன் அகற்றப்பட்டது. அங்குச் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கவிக்ஷா கடந்த ஐந்தாம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே சிறுமியின் இறப்புக்குக் காரணம் என்று கூறி சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உடலை மருத்துவமனை முன்பு வைத்து அவர்கள் நடத்திய இந்தத் போராத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
