பாடகர் நரேஷ் ஐயருக்கு திருமணம்! மணமகள் யார்? வெளியான புகைப்படங்கள்
‘முன்பே வா என் அன்பே வா’, ‘மயிலிறகே’, ‘மெர்சல் அரசன்’ உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள அய்யப்ப விஷ்ணு கோயிலில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் பவாய் பகுதியில் உள்ள அய்யப்ப விஷ்ணு கோயிலில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமே பகிர்ந்துள்ளது.இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிமையான நிகழ்வாக திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேஷ் ஐயரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது மணமகள் குறித்த தனிப்பட்ட விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. திருமணம் தொடர்பாக நரேஷ் ஐயரும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இதுவரை தனிப்பட்ட பதிவை வெளியிடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேஷ் ஐயரின் திருமணத்தை முன்னிட்டு அய்யப்ப விஷ்ணு கோயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. புதுமணத் தம்பதிக்கு அன்பு, மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் வளம் நிறைந்த திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என கோயில் நிர்வாகம் வாழ்த்தியுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.‘முன்பே வா’, ‘மயிலிறகே’ உள்ளிட்ட தமிழ் பாடல்கள் மட்டுமின்றி பல இந்திய மொழிகளில் பாடியுள்ள நரேஷ் ஐயர், ‘ரூபாரூ’ பாடலுக்காக தேசிய திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
