பூமியை நோக்கி வரும் 1.5 டன் விண்வெளித் தொலைநோக்கி! இந்தியாவுக்கு ஆபத்து உள்ளதா?
நாசா விண்ணில் செலுத்திய ‘ஸ்விப்ட்’ விண்வெளித் தொலைநோக்கி பூமியின் வளிமண்டலத்தை நோக்கி இறங்கி வருவதால், அதன் பாகங்கள் இந்தியாவில் விழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய இந்தத் தொலைநோக்கி, காமா கதிர் வெடிப்புகள் மற்றும் சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகள் குறித்து ஆய்வு செய்து வந்தது. சுமார் 22 ஆண்டுகளாகச் செயல்பட்ட இது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமா கதிர் வெடிப்புகளையும், 1,400 நட்சத்திர வெடிப்புகளையும் பதிவு செய்துள்ளது.
சூரியனின் அதிகரித்த செயல்பாடுகளால் வளிமண்டல இழுவிசை அதிகரித்து, தொலைநோக்கியின் சுற்றுப்பாதை தாழ்ந்துள்ளது. இதனை மீட்க நாசா அனுப்பிய ‘லிங்க்’ என்ற ரோபோ முயற்சியும் தோல்வியடைந்தது. இதையடுத்து தொலைநோக்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
சுமார் 1.5 டன் எடையுள்ள இந்தத் தொலைநோக்கியின் பெரும்பாலான பாகங்கள் வளிமண்டலத்தில் எரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டங்ஸ்டன் உலோகப் பாகங்கள் மற்றும் கண்ணாடித் துண்டுகள் பூமியை வந்தடைய வாய்ப்புள்ளது. அவை பெரும்பாலும் கடலில் விழக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட பல பகுதிகள் சாத்தியமான மறுநுழைவுப் பாதையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்தியாவில்தான் விழும் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க விண்வெளிப் படை அதன் பாதையைக் கண்காணித்து வருகிறது.
