விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காடை முட்டைகளில் குறைபாடுகள் - நாசா சோதனையில் அதிர்ச்சி!
விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாத சூழலில் உயிரினங்களின் கரு வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்பதை அறிய நாசா மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
உயிரினங்கள் விண்வெளியில் இயல்பாக இனப்பெருக்கம் செய்ய முடியுமா மற்றும் அவற்றின் கருக்கள் தடையின்றி வளருமா என்பதைச் சோதிக்க நாசா விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இது கடந்த 1995-ஆம் ஆண்டில் நாசா மற்றும் ரஷ்யாவின் கூட்டு விண்வெளித் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
இதற்காக 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. நாசாவின் விண்வெளி வீராங்கனை ஷானன் லூசிட் இந்த முட்டைகளைத் தன்னுடன் எடுத்துச் சென்று அங்குள்ள அடைகாப்பானில் வைத்தார்.

விண்வெளியில் மைக்ரோகிராவிட்டி எனப்படும் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழலில் 16 நாட்களுக்குப் பிறகு முட்டைகளின் கருக்கள் பதப்படுத்தப்பட்டுப் பூமிக்குக் கொண்டு வரப்பட்டன. பூமியில் வளர்ந்த முட்டைகளின் கருக்களுடன் ஒப்பிடுகையில், விண்வெளியில் வளர்ந்த காடைகளின் கருக்களில் மரபணு மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள் நான்கு மடங்கு அதிகமாகக் காணப்பட்டன.
ஈர்ப்புவிசை இல்லாத சூழல் உயிரினங்களின் ஆரம்பக்கட்ட உடல் உருவாக்கத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. மனிதர்கள் எதிர்காலத்தில் விண்வெளியில் நீண்ட காலம் தங்கி வாழ்வதற்கும் புதிய குடியிருப்புகளை அமைப்பதற்கும் இத்தகைய சோதனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
