சுவாமிமலை சிற்பிகளால் அஷ்டதாதுக்களால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை - டெல்லி பாரத் மண்டபத்தில் செம கெத்து!
டெல்லியில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிற்காகத் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை இந்தியாவின் கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.
டெல்லி பாரத் மண்டபத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலை சுமார் 27 முதல் 28 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட பிரம்மாண்டமான வடிவமாகும்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த பிரபல சிற்பி ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் சோழர் கால பாரம்பரியமான மெழுகு அச்சு வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி இச்சிலையை உருவாக்கினர்.
தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு மற்றும் பாஷாணம் ஆகிய எட்டு உலோகங்கள் (அஷ்டதாதுக்கள்) ஒருங்கிணைக்கப்பட்டு மிகத் துல்லியமாக இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இந்த பிரம்மாண்ட கலைப்படைப்பு வெறும் 7 மாத குறுகிய காலத்திற்குள் உருவாக்கப்பட்டு இந்தியாவின் பெருமையை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
