அதிகாரிகளுடன் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் வாக்குவாதம்!

 
சீமான் சோதனை சீமான் சோதனை

 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் சோதனையிடப்பட்டபோது, அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துக் காரைக்குடி பகுதியில் சீமான் நேற்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரைக்குடியில் இருந்து புதுவயல் நோக்கிச் சீமானின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சீமானின் வாகனத்தை மறித்துச் சோதனையிட முயன்றனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த சீமான், வாகனத்தை விட்டு இறங்கி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "வீடு வீடாகச் சென்று பணப்பட்டுவாடா செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, நடுரோட்டில் வந்து எங்களிடம் மட்டும் ஏன் இந்தச் சோதனை செய்கிறீர்கள்?" என அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

சீமான்

தேர்தல் விதிமுறைகளின்படி அனைத்து வாகனங்களையும் சோதனையிட தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். இருப்பினும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பண விநியோகத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள், நேர்மையாகப் பிரச்சாரம் செய்பவர்களை மட்டும் அலைக்கழிப்பதாகச் சீமான் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த வாக்குவாதத்தால் காரைக்குடி - புதுவயல் சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கிருந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் அதிகாரிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பின்னர் சோதனையை முடித்து விட்டு சீமானின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.