"இபிஎஸ் தன்னைத் தானே கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்குவார்" - நத்தம் விஸ்வநாதன் கிண்டல்!

 
நத்தம் நத்தம்

அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் நீக்க நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது பாணியில் விமர்சித்துள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி முடிவுகள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, சி.வி. சண்முகம் தரப்பு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இந்த அதிரடி நீக்க நடவடிக்கை அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி

இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமியை வெகுவாகக் கிண்டல் செய்தார். யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்குவது என்பது தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. இதே நிலை நீடித்தால், ஒருநாள் மறதிவாக்கில் அவரையே கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என அவர் கிண்டலாகத் தெரிவித்தார். இந்த நகைச்சுவையான விமர்சனம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

எடப்பாடி

ஏற்கனவே எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நத்தம் விஸ்வநாதனின் இந்தப் பேச்சு உட்கட்சி மோதலை மேலும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முக்கியத் தலைவர்களுக்கு இடையேயான இந்த மோதல் அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.