நெடுஞ்சாலைப் பணிகளுக்குத் தடை...வெயில் தாக்கத்தால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி,பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தார் சாலை அமைக்கும் பணிகளை இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தார் சாலை அமைக்கும்போது வெளியேறும் வெப்பம் மற்றும் சூரியனின் கடும் வெப்பம் ஆகிய இரண்டும் சேரும்போது, தொழிலாளர்களுக்குப் பெரும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தார் போடும் பணிகளைக் காலை நேரத்திலோ அல்லது மாலை 4 மணிக்கு மேலோ மட்டுமே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமே தங்களுக்கு மிக முக்கியம் என்பதை இந்த உத்தரவின் மூலம் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த உத்தரவை மீறி மதிய நேரங்களில் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களுக்குப் போதிய குடிநீர் வசதி மற்றும் முதலுதவி ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோடைக்கால வெப்பக் காற்றில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த மனிதநேயமிக்க நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
