சுகர், பிபி மாத்திரைகளின் விலையைக் குறைத்தது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முக்கிய மருந்துகளின் விலையைக் குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுவாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி சில மருந்து நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதைத் தடுக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 27-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்த புதிய அறிவிப்பின்படி, நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான 30 வகையான முக்கியக் கூட்டு மருந்துகளின் விலைக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தற்போது புதிய உச்சவரம்பை விதித்துள்ளது.
இந்த புதிய விலை உச்சவரம்பு அமலுக்கு வந்துள்ளதால், இனி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது விருப்பப்படி இந்த அத்தியாவசிய மருந்துகளின் விலையைத் தன்னிச்சையாக உயர்த்த முடியாது. இது நோயாளிகளின் மாதாந்திர மருந்து பட்ஜெட்டை கணிசமாகக் குறைக்க உதவும்.

மத்திய அரசின் இந்த விலை குறைப்பு நடவடிக்கை ஒருபுறம் பாராட்டைப் பெற்றாலும், நோயாளிகளின் மருத்துவச் செலவை இன்னும் முழுமையாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்பொழுது எழுந்துள்ளது. இந்த விலை உச்சவரம்பு தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், சாமானிய மக்களின் மருத்துவப் பாரத்தைக் குறைக்க வேண்டுமானால், இந்த அத்தியாவசிய மருந்துகள் மீது தற்பொழுது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை 5% ஆகக் குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நுகர்வோர் அமைப்புகளும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
